பொது பிரச்சனைகள் குறித்து நம் பார்வையும், கருத்துக்களும்

Saturday 16 February, 2008

மோசமானவர்களா நீதிபதிகள்?


நீதித்துறைப் பற்றி மிகநல்ல ஒரு முடிவு - என்ற தலைப்பில்ரத்னேஷ் என்பவர் எழுதியுள்ள பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டம், பெரியதாக அமைந்ததால் ஒரு பதிவாக போட்டுவிட்டேன்.

தன்னுடைய பதிவில்,

//மத்திய சட்ட அமைச்சகம் நேற்று எடுத்துள்ள சில நல்ல முடிவுகள் 'இதெல்லாம் இவ்வளவு காலம் இந்த நாட்டில் இல்லாமலா இருந்தன?' என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், "BETTER LATE THAN NEVER" என்கிற அளவில் ஆறுதலும் ஏற்படுகிறது://

என ரத்னேஷ் அவர்கள் சொல்லியுள்ளார். நீதித்துறை செயல்பாட்டைப் பற்றி ஒரு மோசமான தோற்றத்தை ஏற்படுத்த "முயலும்" அந்த பதிவிற்கு இது பதில்.

அவர் சொல்லும் "அந்த சில நல்ல முடிவுகள்"- பற்றியும், நிலவும் உண்மைகள் பற்றியும்.

//1. நீதிபதிகளும் தங்கள் சொத்துக் கணக்கை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.//

ஏற்கனவே இந்த விதி எல்லா நீதிபதிகளுக்கும் பொதுவாக நடைமுறையில உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டும் தானாக அறிவிக்க வேண்டும் (Voluntary Disclosure) என்ற நடைமுறை உள்ளது. அதை கட்டாயமாக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது.

//2. நடத்தை விதிமுறைகள் அவர்களுக்கும் வகுக்கப்படும்//

நடத்தை விதிமுறைகள் ஏற்கனவே உள்ளது. 'திருத்திய' நடத்தை விதிமுறைகள் வகுக்கப்படும் என்பது தான் உண்மை.

//3. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நீதிபதிகள் மீது இம்பீச்மெண்ட் கொண்டு வந்து அவர்களைப் பதவி நீக்கம் செய்யவும் வழி வகை செய்யப்படும்.//

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நீதிபதிகள் மீது இம்பீச்மெண்ட் கொண்டு வந்து அவர்களைப் பதவி நீக்கம் செய்யவும் வழி வகை ஏற்கனவே அரசியலமைப்பு சட்டம் பிரிவு 124 (4) -ல் (Article 124(4) ) செய்யப்பட்டுள்ளது. இது உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான். மற்ற நீதிபதிகள் சாதரண விசாரணையிலேயே பதவி நீக்கம் செய்யப்படலாம்.

//4. தேசிய நீதிக்குழு கவுன்சில் அமைக்கப்படும். அதில் சட்டம் படிக்காத எவரும் இடம் பெறாதவாறு பார்த்துக் கொள்ளப்படும்.//

இதன் மூலம் நீதித்துறையில் அரசியல் நுழையவும், நீதித்துறை 'ஒரு வாரியம்' ஆக மாற்றப்படும் அபாயம் உள்ளதை புரிந்த்து கொள்ளுங்கள். அப்போது, அதிகார வர்க்கம் தவறு செய்தால் நீதித்துறையை அணுக முடியாது.

//உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க வேண்டிய ஒரு தகவல்.// என்ற தங்களின் பதிவை படித்தேன். அதையேதான் தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

யாரோ ஒருவர் எங்கோ ஒரு மூலையில் செய்ததாக வந்த தகவல் அடிப்படையில் பொதுவாக கண்மூடித்தனமாக நீதிபதிகள் மீது சேற்றை வாரி இறைப்பது முறையல்ல.

பதில் சொல்ல இயலாத இடத்தில் , பாதுகாப்பற்ற, அதிகார வர்க்கம் எல்லை மீறாமல் இருக்கும் ஒரு வடிகாலாக, இன்றும் கூட அரசாங்கத்தின் அங்கங்கள் அத்து மீறினால் கடைக்கோடி குடிமகனுக்கும் நம்பிக்கை தூணாய் இருக்கும் நீதித்துறை மீது கடுமையான விமர்சனங்கள் வைப்பது நியாயமல்ல.

இன்றும் கூட அதிக அதிகாரப் பதவியில் இருந்தும் சம்பளத்தை மட்டும் நம்பி எத்தனையோ நீதிபதிகள் கடுமையானெ சூழ்நிலையில் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். திருட்டு குற்றவாளியை பிணையில் விட மறுத்த நீதிபதி முகத்தில் காறி துப்பினார் ஒரு வழக்கறிஞர். தாக்கப்பட்டார். தினசரி படிக்கவில்லையா நீங்கள்?

ஒரு சாதாரண 'போலீஸ் இன்ஸ்பெக்டர்' அல்லது ஒரு தாசில்தார் -ன் சொத்து மதிப்பு வாழ்க்கை முறை தெரியுமா? ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாது.

அரசியல் தலையீடுகளிலிருந்து நீதித்துறைக்கு சுதந்திரம் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளதற்கான காரணங்களை அரசியல் வரலாற்றை படித்து தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். கடுமையான விவாதத்திற்கு பிறகுதான் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜனநாயகத்தின் காவலனாக இருப்பது தான் நீதித்துறை. அண்டை நாடுகளிலும், பல இதர நாடுகளிலும அதிபராட்சி வந்தும் இந்தியா மக்களாட்சி நாடாக இருப்பத்ற்கு காரணம் அரசு தலையீடு இல்லாத நீதித்துறை.

வழக்குகள் தேங்கி நிற்பதற்கு காரணம், மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப புதிய நீதிமன்றங்கள் உருவாக்கப்படாதது தான். மக்களுக்கு விழிப்புணர்வு அதிகமாக அதிக வழக்குகள் வருகின்றன. அவற்றை தடுக்க முடியாது, கூடாது. அதிக நீதிமன்றங்கள் அரசின் அத்துமீறலை கேள்வி கேட்க மக்களுக்கு அதிக வாய்ப்பாக போகும் என்பதாலும் செலவினங்களை காரணம் காட்டியும் புதிய நீதிமன்றங்கள் தொடங்க அரசு தயங்குகிறது. இருக்கும் வழக்குகளை நடத்த வழக்குறைஞர்கள் தயாரில்லை. நிர்பந்தித்தால் நீதிமன்ற புறக்கணிப்பு. இது தான் இயல்பு நிலை. அமெரிக்காவில் 10,000 -ம் பேருக்கு ஒரு நீதிபதி உள்ளார். இந்தியாவில் 10,00,000 பேருக்கு ஒரு நீதிபதி உள்ளார். இருக்கும் நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதி இல்லை.

// இந்த நாட்டில் கேள்வியே இல்லாமலும், மேல் முறையீடு இல்லாமலும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும் என்கிற நிலையிலும் உயர்த்தி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு முக்கியத் துறைகள் நீதித்துறையும்.....//

தங்கள் எண்ணம் தவறு. எல்லா நீதி மன்ற தீர்ப்புகளும் மேல்முறையீட்டுக்குட்பட்டவையே. தீர்பபு வழங்குவதற்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. செயல் படுத்த வேண்டியது அரசாங்கமோ அல்லது தீர்ப்பு பெற்றவர்களோதான். நிதி மற்றும் செயல் அதிகாரமில்லாத துறைதான் நீதி துறை. அமெரிக்காவில் "தீர்ப்பு" என்று கூட சொல்வதில்லை. "கருத்து" (OPINION) என்று தான் அழைப்பார்கள். "கருத்தை" (தீர்ப்பை) சொல்லவேண்டியது அவர்கள் கடமை. உங்களுக்கு உடன் பாடில்லையென்றால் மேல் முறையீடு செய்யவும். தீர்ப்பு சாதகமானால் புகழ்வதும் பாதகமானால் இகழ்வதும் கலங்கபடுத்துவதும் தவறல்லவா?. நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் சொன்னதில்லை. தவறு செய்தால் அவர் மீதே வழக்கு தொடருங்கள். மேல் முறையீடு செய்யாமல், தீர்ப்பை விமர்சிப்பது தவறு என்றுதான் சட்டம் சொல்கிறது. அந்த நிலைமை சட்ட கட்டுகோப்பை சீர்குலைக்கும். எ.கா. - உங்களுக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க ஒருவர் முயற்சிக்கிறார். நீங்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்ப்பு பெறுகிறீர். எதிர் தரப்பு அந்த தீர்ப்பை மதிக்க வேண்டும் அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும். அதை விடுத்து நீதிபதி சொன்னால் நான் மதிக்க வேண்டுமா? தீர்ப்பும் சரியில்லை, நீதிபதியும் சரியில்லை என எதிர் தரப்பு கேள்வி எழுப்பினால், உங்கள் நிலைமை என்ன?.

இது போன்ற "வசவு" பதிவுகள், நீதிதுறையின் அமைப்பையும், பெரும்பான்மை நீதிபதிகளின் நிலைமையையும் வாழ்க்கை முறையையும், ஏன் அதிகார வர்க்கத்தின் தலையீடு இருக்க கூடாது என அறிஞர்கள் கருதினார்கள் என்ற வரலாற்று உண்மையும் அறியாமல் இருப்பதால் வரும் விளைவு.

யாரையும் உயர்த்தி பிடிக்கவோ அல்லது மனதை புண்படுத்தவோ முயலவில்லை. என் பார்வையில்... தெரியும் உண்மையை சொல்லுகிறேன்.

மேலும் சொல்லக் காத்திருக்கிறேன். கேளுங்கள்.

வணக்கத்துடன்,
இரமேஷ்.

2 comments:

PRABHU RAJADURAI said...

excellent...apt answers

Anonymous said...

இன்றைய தினகரன் நாளிதழில் (சென்னை பதிப்பு) பக்கம்-8-ல் தன் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குழுவாக வந்திருந்த வக்கீல்கள் தந்த தங்க மோதிரத்தை ஒரு நீதிபதி பரிசாக பெற்றது ஒழுங்கீனம் எனக் கூறி ஆந்திர உயர் நீதிமன்றம் அந்த நீதிபதியை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

திருமண நிகழ்ச்சியில், பரிசு பெற்றது ஒழுங்கீனமா?

இந்த விதி எல்லா துறைகளிலும் பின் பற்றப்பட்டால், கவர்னர் முதல் கடைக்கோடி ஊழியன் வரை எல்லோரையும் பணி நீக்கம் செய்ய வேண்டி வரும்.