கள்ளூண்ணாப் போழ்தில் களித்தானை காணுங்கால்
உள்ளான் கொல் உண்டதன் சோர்வு. (930-குறல்)
பொருள்: குடிகாரன் தான் குடிக்காத நேரத்தில் மற்றொரு குடிகாரனின் அவலத்தைப் பார்த்து, இப்படியா இருந்தோம் என எண்ணிப் பார்த்து திருந்த மாட்டானா?
சந்தோஷமோ துக்கமோ வெற்றியோ தோல்வியோ இப்படி மனதை பாதிக்கும் நிகழ்வு எதுவாயினும் இசையின் மூலம், பாடல், கவிதை, இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்துவதுதான் முறையாக இருந்தது. இலக்கியம்தான் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்து வந்துள்ளது.
தற்போதெல்லம் எந்த ஒரு நிகழ்வென்றாலும் "தண்ணி பார்ட்டிகள்"தான் அதை கொண்டாடும் அல்லது அனுசரிக்கும் முறையாக மாறியுள்ளது. மாணவர்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை இது நடைமுறையில் உள்ளது. தேர்வில் வென்றாலும் தோற்றாலும் (அரியர் வைத்தாலும்) காதலி கிடைத்தாலும் கைவிட்டாலும் நிச்சயமாக பார்ட்டி உண்டு. MNC முதல் சிறிய நிறுவனங்கள் வரை Q1 - Q4 முடிவை அறிவிக்கவும் புதிதாக ஒப்பந்தம் கிடைத்தாலும் பார்ட்டிதான். இவர்களாவது பரவாயில்லை பிறர் பணத்தில் பார்ட்டியை அனுபவிக்கிறார்கள். குடிப்பதை ஒரு கலை என MatrimonyXpress தளம் கூறுகிறது. (http://www.matrimonyxpress.com/2007/01/the-foodie/discover-the-fine-art-of-drinking-wine/)
ஆனால் டாஸ்மாக்கில் குடிக்கும் பெரும்பாலோர் தினக்கூலிகள், ஏழைகள் நடுத்தர மற்றும் அதற்கும் கீழானவர்கள் என்பதுதான் உண்மை. சென்னை நகரில் காலை 8 மணிக்கு டாஸ்மாக்கில் நின்று 'கட்டிங்' அடிப்பவரை நாம் பார்த்திருக்கிறோம். இரவு 11.30 பிறகும் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பும் வரை பாரிலோ அல்லது தெரு ஓரங்களிலோ குடித்து கொண்டே இருக்கிறார்கள். ( அவ்ளோ சோகம் / டென்சன் தெரியுமா??)
அரசு இவர்களுக்கு "குடி-உரிமை" அளித்து அதன் மூலம் வருமானத்தை அதிகமாக்கியுள்ளது. அ.தி.மு.க அரசில் மது விற்பனை ஒரு சாதனை அளவை தொட்டதை சட்டசபையில் அரசு பெருமையாக சொல்லியுள்ளது.
( Retail liquor sale touches a new high as on 18-1-06. தொடுக்க http://www.hindu.com/2006/01/18/stories/2006011808160400.htm ). அரசின் தற்போதைய புள்ளிவிவரப்படி கடந்த ஒரு ஆண்டில் விற்பனை 30% அதிகரித்துள்ளது. மதுக் கடைகள் மூலம் வருடத்திற்கு ரூ. 7000 கோடி கிடைப்பதாக கணக்கு சொல்கிறது. ஏனெனில் டாஸ்மாக் கடைகளை ( சாராய கடை என்றால் நண்பர் கோபிக்கிறார் அதான் Decent ஆக.. டாஸ்மாக்) மூடச்சொன்னால் வருமானத்தை சுட்டி காண்பிக்கிறது அரசு. டாஸ்மாக் கடைகளை திறந்ததன் மூலம் நேரடியாக அதிக வருமானம் ஈட்டியதாக முந்தைய அதிமுக அரசு சாதனையாக சொல்கிறது. 29-11-2003 முதல் மதுக்கடைகளை டாஸ்மாக் மூலம் தமிழக அரசே நடத்தி வருகிறது.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள்
நகர்புறத்தில் உள்ளவை = 3264
புறநகர் பகுதியில் = 3433
மொத்தம் = 6697
டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமானம்
1983-84 -ல் = 139.41 கோடி ரூபாய்
2006-07 -ல் = 7441.00 கோடி ரூபாய்
இந்த பணம் ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும் கொள்ளையடிக்கப்பட்டது. அதே புள்ளிவிவரப்படி வணிக வரி பாக்கி ரூ. 13000 கோடி நிலுவையில் உள்ளது. வரியை வசூலித்தால் அதை வருமானம் என சொல்லலாம். அரசாங்கமே மக்களுக்கு போதையை கொடுத்து பெறும் பணம், வள்ளுவர் வாக்கின்படி, அரசே வழிப்பறி செய்த பணமாகும்.
வேலோடு நின்றான் இடு என்றது போலும்
கோலோடு நின்றான் இரவு (552)
பொருள்: தவறான ஆட்சி மூலம் மக்களிடம் பணம் பறிக்கும் அரசன் கத்தியை காட்டி வழிப்பறி செய்பவனை போன்றவன்.
குடும்பத்தில் தாயே மது தயாரித்து, மக்களுக்கு கொடுத்து, அதிக குடும்ப வருமானத்தை ஈட்டியதாக பெருமை பட்டுக்கொள்ள முடியுமா? தாய்க்கு தன் மக்களின் நலன் தான் முக்கியம். அவ்வாறு செய்யமாட்டாள். ஆனால் அதற்கு ஒப்பான அரசு, வருமானத்தை மட்டும் குறியாக கொண்டு மக்கள் நலனை காவு கொடுக்கிறது. மேற்படி வருமானம் நலத்திட்டங்களுக்கு
செலவிட படுகிறதாம். ஒருபுறம் சாராயம் விற்று உடல்நலத்தைக் கேடாக்கி, மற்றொர் புறம் மருத்துவமனையில் சீராக்குகிறார்களா? இல்லை. இந்த பணம் ஆதரவற்ற விதவைகளுக்கும் முதியோர்களுக்கும் பென்ஷனாகவும் ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் முட்டையோடும் சீருடைகளுக்கு செலவிடப் படுகிறதாம். (தற்பபோது இலவச டீவி கூட வழங்கபடுகிறதாம்)
அடப்பாவிகளே, தந்தைக்கு சாராயம் கொடுத்து கொன்று விட்டு அவன் தாய்க்கும், மனைவி குழந்தைகளுக்கும் நீங்கள் என்ன பிச்சை போடுவது? இதுதான் நலத்திட்டமா? பகல் கொள்ளையல்லவா?
வருமானம் வரும் என்றால் அரசு எந்த தொழிலையும் செய்யலாமா? விபச்சாரத்தை டாஸ்மாக் கடைகள் போல் அனுமதித்தால் அதிக வருமானம் கிடைக்குமே? அதை அரசு செய்யுமா? அப்படி தயவு செய்து செய்து விட வேண்டாம்.
"குடியை ஒழிக்க முடியாது. டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும்". இதுதான் அரசு சொல்லும் வாதம். விபச்சாரத்தையும் தான் ஒழிக்க முடியாது. போலீஸும் தான் "பொறி" வைத்து கொலைகாரனை, ரவுடியை பிடிப்பது போல் தினம் தினம் 'படம்' காட்டி கொண்டிருக்கிறார்கள். ஒழிக்க முடியவில்லையே... அப்படியானால் அரசு விபசார கடை திறக்குமா?
காந்தியை சொந்தம் கொண்டாடும் காங்கிரஸ் மது விலக்கை கண்டு கொள்வதில்லை. கம்னியுஸ்ட்கள் பாவம், எதை எதைத்தான் சொல்வார்கள். அவர்கள் சொன்னாலும் ஆள்பவர்கள் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். அதிமுக அரசு இதை சாதனையாக
சொல்கிறது. திமுக அரசு அதை மாபெரும் சாதனையாக காட்டத்துடிக்கிறது.
இதற்கிடையில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கோரிக்கை, போராட்டம் ஆகியவை அவர் மீதான மதிப்பை உயர்த்துகிறது. ஒரு தனிப்பட்ட சாதி தலைவர் என்ற வட்டத்திலிருந்து வெளியேறி மக்கள் நலனுக்காக போராடும் (சில விஷயங்களை தவிர்த்து) ஒரு பொதுத்தலைவர் என்ற அடையாளத்தை இது அளித்துள்ளது. திரு.ராமதாஸ் இந்த போரட்டத்தில் வெற்றி பெற்றால், ஒரு தலைமுறையை, நாட்டை, வழி தவறியதலிருந்து காப்பாற்றிய பெருமை அவரை சாரும்.
செய்தி:
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசு ( தமிழில், மருத்துவர் மாலடிமை -ஞானி) முதல்வர் கலைஞரை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார். அதில் ஒன்று டாஸ்மாக் கடைகளின் வேலைநேரம் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என்று மாற்ற வேண்டும் என கோரியிருக்கிறார். குடிப்பவர்கள் தன் கட்சியில் இருக்கக்கூடாதென சொல்லியிருக்கிறார். குடிப்பதை எதிர்த்தும் டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும் டாக்டர். அன்புமணி தலைமையில் உறுதி மொழி எடுத்துள்ளனர்.
இப்படி தி.மு.க வும் அ.தி.மு.க வும் அறிவித்தால்...
சாராயக் கடைகளை மூட வேண்டி வரும் அல்லது கட்சியை மூட வேண்டி வரும். ஆனால் இரண்டுமே சாத்தியமில்லை. ஏனெனில் இதில் வரவு கணக்கு மட்டுமல்ல, மக்களை போதையில் வைத்தால் வரும் ஓட்டு கணக்கு உள்ளது. போதையில்லாமல் தேர்தல் இல்லை. தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை.
எல்லோருக்கும் "குடி"-யுரிமை கொடுப்பதுதானே ஜனநாயகம் !
ஏழை, பணக்காரன், மேல் சாதி, கீழ் சாதி அனைவரையும் ஒன்றிணைத்து நாசமாக்குவது டாஸ்மாக் சமத்துவம்!!
வாழ்க டாஸ்மாக்! வாழ்க ஜனநாயகம்!!
(இதை படிக்கிறதுக்குள்ள... அய்யோ! இப்பவே கண்ண கட்டுதே... மாப்ளெ ஒரு கட்டிங் போடலாமா? -ஒரு ஜனநாயக குடிமகன்)
No comments:
Post a Comment